மதுரை: தஞ்சாவூரைச் சேர்ந்த பிரோஜா பேகம், மகேந்திரன், கோவிந்தசாமி, அருண், பாலு உள்ளிட்ட 6 பேர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், 'டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 20.01.2020இல் வெளியிடப்பட்டது. இதில் விண்ணப்பித்தவர்களுக்கு குரூப் 1 முதல்நிலைத் தேர்வு 03.01.21இல் நடந்தது. முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த 09.02.21இல் வெளியிடப்பட்டது.
ஆனால், இந்த முதல்நிலைத்தேர்வு முடிவில், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20 விழுக்காடு ஒதுக்கீட்டின்படி, தேர்வு செய்து அறிவிப்பு வெளியிட்டனர்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி 1 முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களை, தேர்வு செய்து அறிவிப்பு வெளியிடவில்லை.
எனவே, 09.02.2021அன்று குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவு அறிவிப்பை ரத்து செய்து விட்டு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி 1 முதல் பட்டப்படிப்பு வரை, தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 விழுக்காடு ஒதுக்கீட்டில் தேர்வு செய்து, புதிய தேர்வுப் பட்டியல் வெளியிட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி வேலுமணி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரரின் கோரிக்கை குறித்து டிஎன்பிஎஸ்சி தரப்பு வழக்கறிஞர், டிஎன்பிஎஸ்சியிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்கவேண்டுமெனக்கூறி வழக்கு விசாரணையை ஜூலை 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.