முன்னணி சினிமா தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனர் ஞானவேல் ராஜா சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.
அந்த மனுவில், "ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் ஆரம்பித்து ரூ.3 கோடி மோசடி செய்ததாக துளசி மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த ராமநாதபுரம் காவல் துறையினர், ரூ.300 கோடி வரை மோசடி செய்ததாக நீதிமணி, மேனகா, ஆனந்த் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தப் பண மோசடியில் சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவாகிய எனக்கும் தொடர்பு இருப்பதாக ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் பெயர் சேர்க்கப்பட்டது. இதையடுத்து, விசாரணைக்கு நேரில் முன்னிலையாக வேண்டும் என எனக்கு ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய காவலர்கள் அழைப்பாணை அனுப்பியிருந்தனர். இதன்படி பஜார் காவல் நிலையத்தில் நேரில் முன்னிலையாகி எனது தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதில் 'மகாமுனி' படத்திற்கான திரையரங்கு உரிமத்திற்காகவே ரூ.6.92 கோடி நிர்ணயம்செய்யப்பட்டு ரூ.2 கோடி முன்பணமாகப் பெறப்பட்டு படத்திற்கான உரிமம் ஒப்படைக்கப்பட்டது.
இதில் எந்த ஒரு பண மோசடியும் நடைபெறவில்லை. எனவே இந்தப் பண மோசடிக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனவே இந்த வழக்கில் என்னை விசாரிப்பதற்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும். இவ்வழக்கிலிருந்து தவறுதலாகச் சேர்க்கப்பட்ட என்னுடைய பெயரை நீக்கம்செய்ய வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவானது இன்று (நவம்பர் 26) நீதிபதி நிஷாபானு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது பதியப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதித்து, தமிழ்நாடு அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.