மதுரையைச் சேர்ந்த திலீபன் செந்தில் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் தாக்கல் செய்தார்.
அதில், "கரோனா காலத்தில் ஏழை எளியவர்கள், திருநங்கைகள் முதியோர் போன்றவர்களுக்கு நான் உதவி செய்து வருகிறேன். புழல் சிறையில் இலவச சட்ட உதவி பயிற்சி மேற்கொண்டிருந்த இருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. அதேபோல மதுரை, பாளையங்கோட்டை சிறைச்சாலைகளில் உள்ள தலா இரண்டு கைதிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தற்போது சிறைவாசிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இதனால் அங்கு தகுந்த இடைவெளியை கடைபிடிக்க முடியாது. சிறையிலுள்ள கைதிகளுக்கு கரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக பலர் சிறையில் உள்ளனர். இவர்களில் பலருக்கு சர்க்கரை நோய், ஆஸ்துமா, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உள்ளன. இவர்களுக்கு தொற்று எளிதில் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, இதுபோன்ற நோய் பாதித்தோர், வயது முதிர்ந்தோருக்கு உடனடியாக மூன்று மாத விடுப்பு வழங்க வேண்டும். இதேபோல், 10 ஆண்டுகளாக சிறையிலுள்ள கைதிகளுக்கும் மூன்று மாத விடுப்பு கொடுத்து அனுப்ப வேண்டும் அல்லது கரோனா முடியும் வரை நீண்ட கால பரோல் வழங்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பு இன்று (ஜூன் 17) விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.