மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து அனைத்து கட்சிக் கூட்டத்தினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்ட முடிவில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அதில், ' ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு தற்போது வரை மூன்று நாட்களாக வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. மொத்தமாக 180 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 32 வாக்குச்சாவடிகள் ஊரகப் பகுதிகளில் உள்ளன. இதில், 515 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பதைக் கண்டறிந்துள்ளோம்.
ஒவ்வொரு வாக்குச் சாவடிகளில் காவல் அலுவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். அதேபோல் தண்ணீர் கழிப்பறை, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளனவா? என ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 16 ஆயிரத்து 560 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள்.
தேர்வு செய்யப்பட்ட அலுவலர்களுக்கு இரண்டு கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 780 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். தேர்தல் குறித்து புகார் மற்றும் ஏதேனும் தேர்தல் குறித்த சந்தேகங்கள் இருந்தால், 180059-92123 என்ற எண்களுக்குத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒரு ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் காவல் ஆய்வாளர் இரண்டு சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட 18 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு குறித்து எந்த ஒரு புகார் வந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆயத்தமாக உள்ளோம்.
கொட்டாம்பட்டி பகுதியில் தேர்தலை புறக்கணிப்பதாகக் கூறி பொதுமக்கள் கறுப்புக் கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ஏதேனும் புகார் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் " என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன!' - மேற்கு மண்டல ஐ.ஜி.