மதுரையைச் சேர்ந்த பாண்டி என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சலவை தொழிலாளர் நலசங்கத்தில் 35 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உறுப்பினராக உள்ளனர். கடந்த மார்ச் முதல் கரோனா தொற்று காரணத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சலவை தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
60 வயதை கடந்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக தமிழ்நாடு அரசு வழங்குகிறது. தற்போது இந்த ஓய்வூதியமும் வழங்கவில்லை. மேலும், மதுரை மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, சலவை தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் நிவாரண தொகையை மார்ச் மாதம் முதல் 6 மாதத்திற்கு 3ஆயிரம் ரூபாய் விதம் 18 ஆயிரம் ரூபாய் வழங்கவும் நிலுவையிலுள்ள ஓய்வூதியம் ஆயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்
இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.