மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தியாகி இம்மானுவேல் சேகரனின் 66ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி செப்டம்பர் 11ஆம் தேதி பரமக்குடியில் நடைபெற இருக்கிறது. தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாளில் 33 வருடங்களுக்கு முன்பு புதிய தமிழகம் கட்சி தான் தொடங்கிவைத்தது.
2012 ஆம் ஆண்டு சில அசம்பாவிதம் நடந்தது. அதனைத் தொடர்ந்து காவல் துறை கட்டுப்பாட்டில் நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தியாகி இமானுவேல் சேகரன் நிகழ்ச்சிக்குச் செல்லும்போது காவல் துறையினர் இடையூறு செய்கிறார்கள். அதனை காவல் துறை மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் அரசே மதுபானத்தை விற்க ஆரம்பித்த நாள் முதல் கள்ளச்சாராயத்தை தடுக்க போகிறோம் நல்ல மதுவை கொடுக்கப் போகிறோம், படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்துகிறோம் என்று சொல்லி ஆரம்பித்தார்கள்.
அரசாங்கமே மதுவில் வரக்கூடிய பணத்தை வைத்து தான் அரசை நடத்தக்கூடிய சூழலில் உள்ளது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் மூடப்படும் என வாக்குறுதி கொடுத்தார்கள். தேர்தலுக்கு முன்பாக திமுக வாக்குறுதி கொடுத்துவிட்டு பட்டி தொட்டி எல்லாம் மதுவை வளர்த்து வருகிறார்கள். கடைசியாக 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது போல் மூடிவிட்டு 2000க்கும் மேற்பட்ட கடைகளை மீண்டும் திறந்து உள்ளார்கள்.
மது பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிகிறார்கள்; வன்முறை ஏற்படுகிறது. 5ஆயிரத்து 362 கடைகளில் உள்ள பார்கள் சட்ட விரோதமாக செயல்படுகின்றன. முறையாக பணம் செலுத்தப்படுவதில்லை. தமிழ்நாட்டில் மீண்டும் மதுக்கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சனாதனத்தை பற்றி பேசுகிறார்கள். சனாதனம், வருணாசிரமம் இந்து மதம் என்பது என்ன ஒரு புரிதல் கூட உதயநிதி ஸ்டாலினுக்கு இல்லை. அமைச்சர் உதயநிதிக்கு. மதங்கள் குறித்த புரிதல் வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்துவாக இருந்து கொண்டு சனாதனத்தை எதிர்த்து பேசுவது மிகப்பெரிய குற்றம்.
இந்த பிரச்னைகள் குறித்து நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். திமுகவினர் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியவில்லை. உதயநிதி ஸ்டாலின் மன்னிப்புக் கேட்டாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்.
கிறிஸ்தவர்களையோ, இஸ்லாமியர்களையோ இதுபோன்று பேசிவிட்டு அவர்கள் நடமாட முடியுமா?” என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டத்தில் தொடரும் இழுபறி!