மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வஞ்சி நகரத்தில் வாக்குச் சீட்டு குளறுபடி காரணமாக ஊராட்சி 1ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கான மறு வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
உதயகுமார் என்பவர் கட்டில் சின்னத்திலும், வினோத்குமார்-சீப்பு, வெள்ளைச்சாமி-சாவி ஆகிய சின்னத்திலும் என மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, வினோத்குமார் என்ற வேட்பாளரின் சின்னத்தில் மட்டும், தேர்தல் அதிகாரிகளால் வைக்கப்படும், மாவட்டம், ஒன்றியம் மற்றும் வாக்குச்சாவடி மையத்திற்கான குறியீடு அச்சு, வாக்காளர்கள் வாக்களித்தது போன்று இருந்தால், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குப் பதிவு இரண்டு மணி நேரம் நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கே வந்த கொட்டாம்பட்டி ஒன்றிய உதவி தேர்தல் அலுவலர் பாலசந்தர் மற்றும் கொட்டாம்பட்டி காவல்துறை ஆய்வாளர், வேட்பாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக புகார் பெற்றுக்கொண்டு மீண்டும் வாக்குப்பதிவினை தொடர்ந்து நடத்தினர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வினய் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, இன்று இந்த வார்டு உறுப்பினருக்கான மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து வஞ்சி நகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில், கொட்டாம்பட்டி ஒன்றிய உதவி தேர்தல் அலுவலர் பாலசந்தர் மேற்பார்வையில் வஞ்சி நகரம் 1ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கான மறு வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்தது.
இதில் 85 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. வாக்குச்சாவடியில் மேலூர் காவல்துறை கண்காணிப்பாளர் சுபாஷ் தலைமையில் 25 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 51 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பெண்கள் உள்பட மூன்று பேர் கைது