திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சேர்ந்த சாஜ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், 'எனது மனைவியை கொடைக்கானலைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவன் பாலியல் வன்கொடுமை செய்து, அதனை கூறி பலமுறை மிரட்டி வந்துள்ளான். அதுதொடர்பாக 2019 ஜனவரி 1-ல் கொடைக்கானல் காவல்நிலைய ஆய்வாளரிடம் புகார் அளித்திருந்த நிலையில் 3 ஆம் தேதிதான் அதற்கான ரசீதை வழங்கினர். ஆனால் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், பிப்ரவரி 7-ல் எனது மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணத்தையும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். குற்றம் சாட்டப்பட்டவர் தனது செல்வாக்கை பயன்படுத்தியதால், கொடைக்கானல் காவல் ஆய்வாளர் முறையாக விசாரிக்கவில்லை. மேலும், குற்றவாளியை காப்பாற்றும் நோக்கிலேயே செயல்பட்டு வந்தார். அவர் விசாரித்தால் நியாயமான முறையில் விசாரணை நடைபெறாது. ஆகவே, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்', என கூறியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சேஷசாயி, 'பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே பல தெளிவான வழிமுறைகளை வழங்கியுள்ளது. மனுதாரர் புகார் அளித்தும் சுமார் 24 நாட்களுக்கு பின்னரே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை புகாரின் அடிப்படையில் முறையாக விசாரித்திருந்தால் இதுபோன்ற நிகழ்வு நடைபெற்றிருக்காது. ஆகவே வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியதோடு 4 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கை சரியாக விசாரிக்காத கொடைக்கானல் காவல்நிலைய ஆய்வாளர் மீது திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.