சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் தமிழ்நாடு அரசின் சார்பாக ஆறாம் கட்ட அகழாய்வு நடைபெறவுள்ளது. இது குறித்து அறிவிப்பு பொங்கலுக்குப் பின்னர் வெளியாகும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியிருந்தார்.
மேலும் கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு தொல்லியல்துறையின் சார்பாக நில உரிமையாளர்களிடமிருந்து ஒப்பந்தம் மூலமாக ஆய்வுக்காக நிலங்களைப் பெறுகிற பூர்வாங்கப் பணிகளும், ஆய்வுப் பணிகளும் நடைபெற்றுவந்தன.
இதனிடையே இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் தாக்கலின்போது, நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கீழடியில் உலகத்தரம் வாய்ந்த கள அருங்காட்சியகம் ரூ.12.21 கோடி செலவில் அமைக்கப்படும் எனவும், ஆய்வுப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பிப்.19ஆம் தேதி கீழடி 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2014ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையால் தொடங்கி வைக்கப்பட்ட அகழாய்வுப் பணிகள், 2016ஆம் ஆண்டு வரை மூன்று கட்டமாக நடைபெற்றது. அதன்பின் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் சார்பாக 2017 - 2019 காலகட்டத்திற்குள் 4, 5ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.
ஐந்து கட்ட அகழாய்விலும் சூது பவள மணிகள், தங்கக் காதணிகள், சுடுமண் சிற்பங்கள், வட்டச் சில்லுகள், பகடைக் காய்கள், எழுத்துப் பொறிக்கப்பட்ட பானையோடுகள், உறை கிணறுகள், செங்கல் கட்டுமானங்கள், வாய்க்கால் போன்ற அமைப்புகள், பறவை, வீட்டு விலங்குகளின் எலும்புகள், திமிலுள்ள காளையின் படிமங்கள் என ஏறக்குறைய 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்ட 4, 5ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளின் போது கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும், மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: விஜய் சேதுபதி ட்வீட்டை தலைப்பாக பதிவு செய்யக் கோரிய 'தமிழ்ப்படம்' இயக்குநர்