மதுரை: உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு பெரிதும் கொண்டாடப்படுகின்ற ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த விழாவிற்கு மதுரை மட்டுமன்றி அண்டை மாவட்டங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்பது வழக்கம்.
கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு சித்திரைத் திருவிழா கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது. அதேபோன்று இந்த ஆண்டும் கரோனா இரண்டாவது அலை காரணமாக கோயில் வளாகத்திலேயே நடைபெற்றுள்ளது.
![kallazhagar landing in artificial vaigai river in madurai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-01-azhagar-vaigai-chitra-fest-script-7208110_27042021111957_2704f_1619502597_673.jpg)
அந்த வகையில் மதுரை மாவட்டம் அழகர் கோயில் சுந்தரராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் மாதிரி வைகையாறு வடிவமைக்கப்பட்டு அதில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி மாதிரியாக வடிவமைக்கப்பட்ட வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
![kallazhagar landing in artificial vaigai river in madurai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-01-azhagar-vaigai-chitra-fest-script-7208110_27042021111957_2704f_1619502597_308.jpg)
இந்நிகழ்ச்சியில் கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்கள், ஊழியர்கள், அலுவலர்கள் மட்டும் கலந்துகொண்டனர். பக்தர்கள், பொதுமக்களின் வசதிக்காக திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் யூ-ட்யூப் தளத்தின் வாயிலாக வீட்டிலிருந்தே கண்டுகளிக்க நேரலை ஒளிபரப்பப்பட்டது.