மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற தேமுதிக நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது, ‘தன்மானத்துக்காகதான் மக்கள் வாழ்கிறார்கள். தேமுதிகவினரை மதிப்பவர்களுக்கு மலர்களாக இருப்போம். மதிக்காதவர்களுக்கு முள்ளாக இருப்போம். விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்ட அழகர்சாமிக்கு வாக்களித்த வாக்காளர் பெருமக்களுக்கு இந்தத் நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள். தற்போது கிடைத்த இடைத்தேர்தல் வெற்றியை போல, உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும். அயோத்தி தீர்ப்பு காலம் கடந்த தீர்ப்பு என்றாலும், அனைத்து மதத்தினரும் வரவேற்க கூடிய தீர்ப்பாகும். இந்த தீர்ப்பில் இந்துக்களுக்கு ராமர் கோயில் கட்டவும், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டவும் இடம் ஓதுக்கியதை தேமுதிக வரவேற்கிறது. இடைத்தேர்தலில் திருமங்கலம் ஃபார்முலா என கொண்டு வந்தது திமுகதான். கடந்த காலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக ஜெயித்தது பணம் கொடுத்து தான். ஆனால் தற்போது அதிமுக கூட்டணியை குறைகூறுகிறது’ என்று கூறினார்.
ரஜினியின் காவி சாயம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘பாஜக காவி சாயம் பூச நினைக்கிறது என நடிகர் ரஜினி கூறியிருப்பது அவரின் சொந்தக் கருத்து. இதற்கு நான் ஏதும் சொல்வதற்கு இல்லை’ என்றார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் வேட்பாளர் பெயரை அறிவிப்போம் - பிரேமலதா