மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை ரத்து செய்யக் கோரி 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்தவர் இரோம் ஷர்மிளா. இவர், மணிப்பூரின் இரும்பு பெண்மணி என்றும் அழைக்கப்படுகிறார். மணிப்பூரின் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு மோசமான தோல்வியைத் தழுவினார். இதையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு தேஸ்மந்த் கொட்டின்கோவை கொடைக்கானலில் அவர் திருமணம் செய்துகொண்டார். தற்போது, அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில், கொடைக்கானலில் வசித்துவரும் இரோம் ஷர்மிளா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "15 வருடங்கள் சிறையிலிருந்து பெரிய போராட்டங்களை அரங்கேற்றியபின் தற்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரோடு திருமணம் நடந்தது. என் கணவரோடு வெளிநாட்டிற்கு செல்ல பாஸ்போர்ட் தர விண்ணப்பித்த நிலையில், தொடர்ந்து அலுவலர்கள் தாமதித்துவருகின்றனர். எனவே, அலுவலர்களை தனக்கு விரைவில் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பாரதிதாசன், மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் வழக்கு தொடர்பாக கூடுதல் விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தவைத்தார்.