மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையைச் சேர்ந்த ஜோதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார். அதில், "எனது கணவர் மணி 2018ஆம் ஆண்டு அப்பாட்டஸ் (APATUS) என்ற தனியார் நிதி நிறுவனத்தில் ஆறு லட்ச ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார். அப்பொழுது அந்த நிறுவனத்தின் சார்பில் ஒரு காப்பீடு போடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அந்தக் காப்பீடு எடுக்கப்பட்ட நகல்களை எங்களிடம் வழங்கவில்லை, எனது கணவர் முறையாகத் தவணை செலுத்திவந்த நிலையில் கடந்தாண்டு உயிரிழந்துவிட்டார். அப்போது எனது கணவர் வாங்கிய கடன் தொகையானது காப்பீட்டுத் தொகையில் சரிசெய்யப்படும் என நாங்கள் கருதினோம். ஆனால் ஐந்து லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் வரை நாங்கள் கட்ட வேண்டும் என எங்களுக்கு நிதி நிறுவனத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதி நிறுவனத்தின் சார்பில் மிரட்டல்விடுக்கப்பட்டது. இந்நிலையில், நாங்கள் கடன் வழங்கிய ஆவணங்களைச் சரிபார்த்தபோது கடன் வழங்கிய நிதி நிறுவனம் அடைமான கடனாக 22 விழுக்காடு வரையும் தவணை தவறிய கடன் தொகைக்கு 36 விழுக்காடு வட்டி வசூலிப்பது தெரிந்தது.
ஆனால் கந்துவட்டி தடைச்சட்டத்தின்கீழ் ஒன்பது முதல் 12 விழுக்காடு மட்டுமே வட்டி வசூலிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தனியார் நிறுவனம் 36 விழுக்காடு வரை வசூல்செய்கின்றனர்.
மேலும், எங்கள் கடன் தொகையை வாங்கியபோதே காப்பீடு எடுக்கப்பட்டுள்ளதே என நிறுவனத்திடம் கேட்டபோது, கடன் வாங்கிய உங்களது கணவர் பெயரில் காப்பீடு எடுக்காமல் உங்களது மகன் பாலசுப்பிரமணியன் பெயரிலேயே காப்பீடு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் வட்டியுடன் சேர்த்து அசலையும் கட்ட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கடன் வாங்கிய எனது கணவர் பெயரில் காப்பீடு எடுக்காமல் எனது மகன் பெயரில் நிதி நிறுவனம் எடுத்த காப்பீடு மோசடியான செயலாகும். எனவே, காப்பீடு விஷயத்தில் மோசடி செய்ததோடு, 36 விழுக்காடு வரை வட்டி வசூல் செய்யும் இந்த நிறுவனத்திடமிருந்து எங்களது கடன் தொகையைத் தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து ரிசர்வ் வங்கி, காப்பீடுத் திட்ட ஒழுங்குமுறை ஆணையம், நிதி வழங்கிய அப்பாட்டஸ் நிறுவனம் ஆகியவை பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதையும் படிங்க: அகல பாதை அமைக்கும் பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம்!