மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்காணோர் வருகை தருகின்றனர்.
இதனால் கோயிலின் நான்கு கோபுர நுழைவாயில்களிலும் பாதுகாப்பு பணிகளில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டு உரிய சோதனைக்கு பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக நான்கு மாதங்களுக்கு பின், கடந்த மாதம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் கோயிலில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்பு படை அலுவலர்கள் நேற்று (அக்டோபர் 19) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கோயில் வளாகத்தில் கூடுதல் எண்ணிக்கையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவேண்டும், பக்தர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் என அனைத்து தரப்பினரும் உரிய சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும், நுழைவாயில்களை தவிர மற்ற பகுதிகளில் யாரையும் அனுமதிக்கக் கூடாது, பக்தர்கள் அமரும் பகுதிகளில் உள்ள செயல்படாத சிசிடிவி கேமிராக்களை பழுதுநீக்கம் செய்யவேண்டும், பதிவுகளை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள உயரமான கட்டடங்களை கண்காணிக்க வேண்டும், கோயிலுக்கு மேற்புரத்தில் ஆளில்லா விமானங்கள் ஏதேனும் சென்றால் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என மதுரை மாநகர காவல்துறை அலுவலகத்திற்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
இதேபோல் கோயில் நிர்வாகமும், காவல்துறையினரும் இணைந்து பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். கரோனா ஊரடங்கிற்கு பின் நடைபெறக்கூடிய தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் பணியில் அலட்சியம் மேற்கொள்ளும் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த ஆய்வைத் தொடர்ந்து தற்போது கோயில் வளாகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.