மதுரை: தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்குவதுடன் பாண்டியன் எக்ஸ்பிரஸ்க்கு நிழல் ரயில் இயக்க வேண்டும்' (Operate Shadow Train To Pandian Express) என மதுரை கோட்ட ரயில்வே ஆலோசனைக் குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்கவும் அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழுவின் இந்த ஆண்டிற்கான முதல் ஆலோசனைக்குழு கூட்டம் இன்று (ஜூன் 16) மதுரை ரயில்வே கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மூத்த வர்த்தக மேலாளர் ரதிப்பிரியா, ரயில்வே அதிகாரிகள், தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த உறுப்பினர்கள் 20 பேர் கலந்து கொண்டனர்.
கரோனாவிற்கு முன்பு நீக்கப்பட்ட ரயில் நிறுத்தங்களை திரும்ப வழங்குதல், முன்பு சாதாரண பயணிகள் கட்டண ரயில்களாக இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் அவ்வாறு இயக்குதல், மதுரை, திருநெல்வேலி தென் மாவட்ட நகரங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்குதல் உள்ளிட்ட கோரிக்கைளை பெரும்பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தினர். மாற்றுத்திறனாளிகள், முதியோர் எளிதில் செல்வதற்கு பேட்டரி கார் வசதி மேம்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தண்ணீர் என நினைத்து ஸ்பிரிட்டைக் கொடுத்த தாய்.. மதுரை அரசு மருத்துவமனையில் சிறுமி பலி!
இதுகுறித்து ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், 'மதுரையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ்க்கு நிழல் ரயில் இயக்குதல், பல்வேறு ரயில்வே மேம்பால பணிகள் விரைவுப்படுத்துதல், ரயில் பெட்டிகளை அடையாளம் காணும் வகையில் டிஜிட்டல் போர்டுகள் அமைத்தல், பழனி ரயில் நிலையத்தில் தங்கும் அறைகள் அமைத்தல், சிறப்பு ரயில்களை தொடர்ந்து இயக்குதல், பண்டிகை காலங்களில் அதிகப்படியான சிறப்பு ரயில்கள் இயக்குதல், இருசக்கர வாகன நிறுத்தங்களில் பயணிகளை இறக்கி விட்டு செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யக் கூடாது, முக்கிய ரயில் நிலையங்களில் டிக்கெட் கிளார்க்குகளை நியமனம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.
இதையும் படிங்க: செங்கல்பட்டில் மாநில அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டி: டிஜிபி சைலேந்திர பாபு துவக்கி வைத்தார்
24 ரயில் நிறுத்தங்களை திரும்ப வழங்குவதற்கான முன்மொழிவை மதுரை ரயில்வே கோட்டம் சார்பாக, தெற்கு ரயில்வேயிடம் அளிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் கூடுதல் நடைமேடைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை நோக்கி தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக ரயில்கள் செல்வதால் ரயில் பாதை நெருக்கடியாக உள்ள நிலையில் கூடுதல் ரயில்கள் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதாக ரயில்வே அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உடல் ரீதியாக விளையாட பெண்கள் விளையாட்டு பொம்மையா? - குஷ்பூ ஆவேசம்!