மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 'ஆளப்பிறந்தோம்' என்ற நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மாணவ, மாணவர்களிடம் உரையாற்றினார்.
பின்னர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "ஏற்கனவே திமுக ஆட்சியின்போதுதான் என்பிஆர் எடுக்கப்பட்டது. அதில் புதிதாகச் சேர்க்கப்பட்ட தாய், தந்தையின் பிறப்பிடம் குறித்த மத்திய அரசு சார்பில் வழிகாட்டி அமைப்பின் விளக்கம் கேட்டு எழுதப்பட்டுள்ளது.
இன்றைக்கு எடுக்கப்படவுள்ள கணக்கெடுப்பில் அதில் எந்தவித ஐயப்பாடும் யாருக்கும் கிடையாது. என்பிஆரை பொறுத்தவரையில் 2010ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்டது. ஆகவே, இவர்கள் மக்களை திசைதிருப்பி குழப்பம் ஏற்படுத்திவருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் (CAA) பாதிக்கப்பட்டவர்கள் குறித்து முதலமைச்சர் கேட்டபோது ஸ்டாலின் ஏன் பதில் கூறவில்லை. ஆதலால் அது குறித்து எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதியாக தெரியவருகிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் ஆதாரத்துடன் கூறியிருந்தால் அதற்கு ஆதாரத்துடன் முதலமைச்சர் பதில் கூறியிருப்பார். இதில் என்ன முரண்பாடு கண்டார் என்பது தெரியவில்லை. உறுதியாக குடியுரிமை திருத்தச் சட்டத்தினாலும், என்பிஆர் சட்டத்தினாலும் எந்தவித பாதிப்பும் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடையாது" என்று பதிலளித்தார்.
மேலும், "ராஜ கண்ணப்பன் இன்றைக்கு அவருடைய நிலைப்பாடை பார்த்து அனைவரும் அவர் மீது பரிதாபப்படுகிறார்கள். மூழ்கும் கப்பலில் புதிய பயணியாக ராஜ கண்ணப்பன் சேர்ந்திருப்பது, அந்தக் கப்பலுக்கும் ஆபத்து, இவருக்கும் ஆபத்து" எனக் கிண்டலடித்தார்.
இதையும் படிங்க: 'சீமானை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்'