இராமநாதபுரம்: உச்சிப்புளியில் அடர்த்தி குறைந்த காடுகளை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ், இந்திய கடற்படை ஹெலிகாப்டர் மூலம் விதைப் பந்துகள் தூவும் பணி நடைபெற்றது. இதை தமிழக மற்றும் புதுச்சேரி பிராந்திய கடற்படை அதிகாரி ரவிக்குமார் டிங்க்ரா தொடங்கி வைத்தார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளை சார்பில் இந்திய கடற்படை மற்றும் வனத்துறையுடன் இணைந்து, அடர்த்தி குறைந்த காடுகளை பசுமையாக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. ராமேஸ்வரம் பகுதிக்கு உட்பட்ட, வனத்துறையின் பராமரிப்பில் உள்ள பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் மாவட்டத்தின் மண் சார்ந்த பாரம்பரிய நாட்டு இன மரங்களான வேம்பு, புளி, நாவல், புங்கன் போன்ற விதைகள் தூவும் பணியானது ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமான தளத்தில் இருந்து தொடங்கப்பட்டது.
இந்நிலையில், மாதா அமிர்தானந்தமயி மடத்தின் பொருளாளர் சுவாமி ராமகிருஷ்ணநந்தா புரி, விதைகளை, தமிழகம் மற்றும் புதுச்சேரி பிராந்திய இந்திய கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் ரவிக்குமார் டிங்க்ராவிடம் ஒப்படைத்தார். அதனைத்தொடர்ந்து, ஐஎன்எஸ் பருந்து ஏவுதளத்தின் ஹெலிகாப்டர் மூலம் விதைகளை தூவும் பணி தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாதா அமிர்தானந்தமயி மடத்தின் பொருளாளர் சுவாமி ராமகிருஷ்ணநந்தா புரி பேசியதாவது, "உலகில் ஆண்டுதோறும் 10 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிந்து வருகின்றன. இதனால் உலகில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். அழிந்து வரும் நிலையில் மீதி இருக்கும் சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாக்கவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் பூமியில் மரங்களை நட வேண்டும். அதற்காக மாதா அமிர்தானந்தமயி மடம் ஜி20 மாநாட்டை முன்னிட்டு உலகளவில் 1.3 மில்லியன் விதைகளை தூவ திட்டமிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 லட்சம் விதைகள் தூவப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து, வறட்சி மாவட்டமான ராமநாதபுரத்தில் ஹெலிகாப்டர் மூலம் 4 லட்சம் விதைகள் மழைக்காலத்தில் தூவப்படும் நிலையில் அதற்கான விதைகள் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படும். மேலும், அடர்த்தி குறைந்த காடுகளை கண்டறிந்து அதற்கான வரைபடத்தை இந்திய கடற்படையிடம் வனத்துறை வழங்கியுள்ளது. இதற்காக இந்திய கடற்படைக்கும், தமிழக வனத்துறைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
அதனைத்தொடர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி பிராந்திய இந்திய கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் ரவிக்குமார் டிங்க்ரா பேசியதாவது, "காடுகளை பசுமையாக்கும் பணியில் இந்திய கடற்படையும் இணைந்துள்ளது சிறப்பான பணி. இந்திய கடற்படை முதல் முறையாக வானிலிருந்து விதைகளை தூவும் பணியில் ஈடுபடுகிறது. காடுகளில் விதைகளை தூவி மரங்கள் வளர்வதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். சமுதாயத்திற்கு பயனுள்ள இத்திட்டத்தில் இந்திய கடற்படையும் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது" என்று கூறினார்.
மேலும், மழைக்காலம் துவங்கியதும் வனத்துறையின் மூலம் கண்டறியப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட மற்ற பகுதிகளில் இந்திய கடற்படை INS பருந்து ஏவுதளத்தில் உள்ள ஹெலிகாப்டர் மூலம் விதைகள் தூவி மரங்கள் வளர்க்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தாறுமாறாக அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்.. சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்!