மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் ஜிஜி கிரானைட்ஸ் என்ற கிரானைட் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
கோபாலகிருஷ்ணன், மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில், 130 கோடி மதிப்பிலான 80 ஏக்கர் நிலங்களைப் பினாமி சொத்துக்களாகத் தனது உறவினர்கள், ஊழியர்களின் பெயரில் வாங்கி வைத்துள்ளதாக வருமான வரித்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட வருமானவரித் துறையினர், முதற்கட்டமாகப் பினாமி தடைச் சட்டத்தின் கீழ் கோபாலகிருஷ்ணன் நாராயணபுரம் பகுதியில் வைத்துள்ள 55,000 சதுர அடியிலான 15 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை நேற்று(அக்.22) முடக்கினர்.
இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பினாமி சொத்துகள் வாங்கிய விவகாரத்தில் பிரபல சினிமா தயாரிப்பாளர் அன்புச்செழியனுக்கும் இதில் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த 2012 ஆம் ஆண்டு சகாயம் தலைமையிலான குழுவினர், ஜிஜி நிறுவனம் சட்டவிரோதமாக மதுரையில் கிரானைட் எடுப்பது தொடர்பாக ஆய்வு நடத்தி அதன் அறிக்கையைச் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.