விருதுநகரைச் சேர்ந்த திருமலை என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல்செய்தார். அதில், “விருதுநகர் மாவட்டத்தில் எம் சாண்ட், உவரி மண், தூசி மண் என்ற பெயரில் அரசு அனுமதி பெற்று ஆற்று மணல் திருட்டில் ஈடுபடுகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், பகுதியில் சாண்ட் தயாரிப்பதாக கூறி வைப்பாறு ஆற்று பகுதி, கண்மாய்கள், குளங்களில் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுகிறார்கள்.
இதனால் அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது, நீர்நிலைகளும் பெரிதும் பாதிப்படைகிறது. இது சம்பந்தமாக அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே விருதுநகர் மாவட்டத்தில் எம்.சாண்ட் என்ற பெயரில் இயங்கிவரும் மணல் குவாரிகளை நேரடியாக ஆய்வுசெய்ய வழக்கறிஞர் ஆணையம் அமைத்து ஆய்வுசெய்ய வேண்டும், மேலும் சட்டவிரோத மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கூறியுள்ள பகுதிகளில் விதிமுறைகளை மீறி ஆற்று மணல் அல்லபடுகிறதா என்பது குறித்து ஆய்வுசெய்ய வழக்கறிஞர் ஆணையர் அமைத்து ஆய்வுசெய்ய உத்தரவிட்டார்.
இந்த வழக்கறிஞர் ஆணையம் மனுதாரர் கூறியுள்ள பகுதிக்கு நேரடியாகச் சென்று சட்டவிரோத மணல் குவாரிகள் நடைபெறும் என்பதை ஆய்வுசெய்ய வேண்டும் ஆய்வின்போது வீடியோ, புகைப்படங்களுடன் கூடிய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.