மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக நடைபெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கலந்துகொண்டார். பின்னர் மதுரை மாநகர பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தன் மீதான ஊழல் வழக்குகளில் இருந்து ஜாமின் வாங்குவதில் சாதனை படைத்தவர் ப. சிதம்பரம் என்றார்.
வாகன உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மந்த நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், வாகன உற்பத்தி தொழிலை பொறுத்தவரை தற்போது இந்தியா முழுவதும் ஒரு தேக்க நிலை இருந்து வருவதாகவும், அதனை பிரதமர் மோடி தலைமையிலான அரசு நிச்சயம் சரிசெய்யும் என்றும் கூறினார். இந்த நிலை ஏற்பட்டுள்ளதற்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பே காரணம் என்று சொல்வது தவறானது என்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு நடைமுறையின் காரணமாக இன்று அரசுக்கு பல்லாயிரம் கோடி வருமானம் கிடைத்து வருதாகவும் குறிப்பிட்டார்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசிய இல. கணேசன், மத்திய அரசு எடுத்துள்ள இந்த நிலைப்பாட்டை கண்டித்து திமுக டெல்லியில் நடத்துகின்ற போராட்டம் முதலில் நடைபெறுமா என்று பார்ப்போம் என தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கருத்து பற்றி பேசிய அவர், அரசுத் திட்டங்களை செயல்படுத்தாத அரசு அலுவலர்களை பொதுமக்கள் தாக்கலாம் என்ற நிதின் கட்காரியின் கருத்தை கருத்து ரீதியான தாக்குதல் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் நிதின் கட்கரி போன்ற ஜனநாயகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்கள் அதுபோன்று பேசியிருக்க வாய்ப்பில்லை எனவும் விளக்கமளித்தார். அமைச்சரின் பேச்சு தொடர்பான மொழிபெயர்ப்பில் ஏதோ குழப்பம் நேர்ந்திருப்பதாகவும் கூறினார்.