மதுரை: சைவ சமயத்திற்கும், தமிழுக்கும் அருந்தொண்டாற்றிய மதுரை ஆதீனத்தின் 292ஆவது பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதர் கடந்த 13ஆம் தேதி இயற்கை எய்தினார். இவர் 1975ஆம் ஆண்டு முதல் 2021 ஆகஸ்ட் 13 வரை சுமார் 46 ஆண்டுகள் மதுரை ஆதீனத்தின் பீடாதிபதியாகச் செயல்பட்டுவந்தார்.
இவரது மறைவைத் தொடர்ந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை மதுரை ஆதீனத்தின் 293ஆவது பீடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனத்திற்கான ஆச்சார்யா அபிஷேகத்தினை தருமபுர ஆதீனம் முன்நின்று நடத்திவைத்து தீட்ஷையும் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இளைய ஆதீனமாக அறிவிக்கப்பட்டேன்
அதனைத் தொடர்ந்து, மதுரை ஆதீன மடத்தின் ரகசிய அறையில் இருந்த அசையும் அசையா சொத்துகளின் பத்திரங்கள், ரொக்கப் பணம், தங்க, வைர ஆபரணங்கள் உள்ளிட்ட அனைத்தும் தருமபுரம் ஆதீனத்தின் முன்னிலையில் எடுத்துப் பார்க்கப்பட்டது.
சரியாக இருப்பதாகக் கணக்கிட்ட பின்னர் அவை 293ஆவது பீடாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. தொன்மையான சைவ ஆதீன மடங்களில் மிகவும் பழமையானது மதுரை ஆதீன மடம்.
இந்த ஆதீன மடம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் 293ஆவது பீடாதிபதியாக பதவியேற்றுக்கொண்டுள்ளதாகவும், இனி ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாகவும் ஃபேஸ்புக் பக்கத்தில் நித்தியானந்தா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீ லஸ்ரீ பகவான் நித்யானந்தா
கடந்த 2012ஆம் ஆண்டு ஏற்கெனவே அருணகிரிநாதரால் தான் இளைய ஆதீனமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் ஆதீனமாகப் பொறுப்பேற்ற நிலையில், கைலாசா நாட்டு ஆதீன மட செயல்பாடுகளின் வழிகாட்டுதல் குறித்தும் ஐந்து பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் மதுரை ஆதீனத்தின் 292ஆவது பீடாதிபதியான அருணகிரிநாதர் மறைவை அடுத்து கைலாசா நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார். மேலும், 293ஆவது மதுரை ஆதீனம், தான்தான் எனக் கூறி தனக்கான பெயரை 293ஆவது ஜெகத்குரு மஹா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் எனவும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
திடீரென யூ-ட்யூபில் தோன்றிய அவர், கைலாசா என்ற நாட்டை தான் உருவாக்கியிருப்பதாகவும், தனிநாடு தகுதி கோரி ஐநாவிடம் விண்ணப்பித்திருப்பதாகவும் கூறியிருந்தார். நித்யானந்தாவுடன் கைலாசா நாடு, சமூக வலைதளங்களில் அப்போது ட்ரெண்ட் ஆனது. கைலாசா நாட்டிற்கென்று பிரத்யேகமாக வலைதளம் ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார் நித்தியானந்தா.
கைலாசாவுக்குப் பாஸ்போர்ட்
எல்லாவற்றுக்கும் மேலாக, கைலாசாவில் ரிசர்வ் வங்கியைத் திறந்திருப்பதாகவும், பணம் என்ற பெயரில் சில தங்க நாணயங்களையும் வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். வெங்கடேசப் பெருமாள் போன்று சங்கு, சக்கரம், கண்கவரும் நகைகள், கிரீடத்துடன் இருக்கும் தனது புகைப்படத்தை கடந்த ஏப்ரல் மாதம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு பக்தர்கள் கைலாசா நாட்டிற்கு வர வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார்.
அந்தப் பதிவில், "பகவான் வெங்கடேஸ்வரரின் மங்களகரமான ஆசிர்வாதங்களையும் அருளையும் பெற்று உங்கள் நிதி நெருக்கடிகளிலிருந்து வெளி வாருங்கள். செல்வம் ஏராளமாகப் பெருகும். கைலாசா நாட்டிற்கு வருகை தாருங்கள்.
கைலாசா நாட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இலவசமாகக் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற்றுக்கொள்ளலாம். உலகின் ஒரே இந்து நாடான கைலாசாவை ஆதரிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: இந்தியர்களுக்கு கைலாசாவில் அனுமதியில்லை