மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் நேற்று இரவு சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. இந்த கனமழையால் அலங்கநல்லூர், வாடிப்பட்டி, சோழவந்தான், பால்மேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டி மக்கள் அவதியடைந்தனர். அதேபோல் முடுவார்பட்டியில் பலத்த காற்று வீசியதில், மாடசாமி என்பவர் வீட்டின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
மேலும், சோழவந்தான் பகுதியில் வீசிய சூறாவளிக் காற்றால் சுமார் 12 ஏக்கரில் பயிரிடப்பட்ட 2500 வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.