மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விரோனிகா மேரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதில், "திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்கக் கூடிய 3 பிளான்ட் உள்ளன. ஒரு மணிநேரத்திற்கு 140 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரிக்கக்கூடிய திறன் கொண்டது. 2003 ஆம் ஆண்டு முதல் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் செங்கல்பட்டு பகுதியில் ஹெச்.எல்.எல் பயோடெக் நிறுவனம் 2012ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, பல வகையான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த திருச்சி பெல் நிறுவனத்தில் செயல்படாமல் இருக்கும் ஆக்சிஜன் தயாரிக்கும் பணியை மேற்கொள்ள போதுமான கட்டமைப்பு வசதிகளை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செங்கல்பட்டில் இயங்கிவரும் ஹெச்.எல்.எல் பயோடெக் நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி தயாரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசி எளிதாக சென்றடையும்" என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதில், திருச்சி பெல் நிறுவனத்தில் உள்ள 3 கலன்களில் 140 மெட்ரிக் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியுமா?.
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவா பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க கோரி எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் மத்திய அரசு ஆக்சிஜன் தயாரிக்க முழு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய சூழலில், திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க மத்திய அரசு முன் வராதது ஏன்?.
மத்திய அரசுக்கு சொந்தமாக எத்தனை தடுப்பூசிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. அதன் தற்போதைய நிலை என்ன?. கோவாக்சின் என்ற மருந்தை ஐ.சி.எம்.ஆர். உதவியுடன் தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும்போது, மத்திய அரசு என்ன நிலையில் உள்ளது. தடுப்பூசி தயாரிப்புக்காக கடந்த 5 ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை எவ்வளவு?.
தடுப்பூசிகள் தயாரிப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு பெரும் தொகையை ஒதுக்கீடு செய்யக் கூடிய சூழலில், அரசே தடுப்பூசிகள் தயாரிப்பதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து வரும் 19ஆம் தேதி மத்திய அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தடுப்பூசி போட்டுக்கொண்ட விஜயபாஸ்கருக்கு கரோனா