இது குறித்து திருச்சியைச் சேர்ந்த வழக்குரைஞர் ராஜகோபால் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல்செய்த மனுவில், "திருச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துவருவதால் இறப்பு எண்ணிக்கையும் அதிகமாகிவருகிறது. இதுவரை ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதோடு 70-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
திருச்சியில் பல்வேறு இடங்கள் தொற்று பாதித்துள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த இந்திய மருத்துவக் கழகத்தின் திருச்சிக் கிளை, திருச்சி மாவட்டம் முழுவதும் இரண்டு வார காலத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்தது.
ஆனால், மாவட்டம் நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கரோனா தொற்றால் ஐந்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இறந்துள்ளனர். காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்பட 75 விழுக்காட்டினர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்திய மருத்துவக் கழகம் பரிந்துரையின்படி, திருச்சியில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மருத்துவச் சிகிச்சையைக் கண்காணிப்பதுபோல், திருச்சியில் கரோனா தொற்று சமூகப் பரவலாக ஆகாமல் இருக்க உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து திருச்சி மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
அரசுத் தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், "திருச்சி மாவட்டத்தில் தினசரி சராசரியாக ஆயிரத்து 100 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மேலும் பத்து தனியார் பரிசோதனை மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவருகிறது" எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, "ஒருவர் கரோனா பரிசோதனைக்கு வந்தவுடன், அவருக்கு பரிசோதனை முடிவு உறுதிப்படுத்த எவ்வளவு காலம் ஆகும்? பரிசோதனை முடிவு தாமதமானால், கரோனா நோய்த்தொற்று உள்ளவர்கள் வெளியில் நடமாடுவதால் தொற்றுப் பரவும் நிலை உள்ளது" எனத் தெரிவித்தது.
இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர், மாநாகராட்சி ஆணையர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: திருச்சியை 2ஆவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும்: தமுமுக கோரிக்கை