தமிழ்நாட்டில் அரசு கலைக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக்குழு 2009ல் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றக்கோரி ராஜேஷ், ஜெஸ்லின் பிரிசில்டா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன், "ஆசிரியர் பணி என்பது உயர்வான பணியாகும். வகுப்பறைகளில் கற்பிப்பது ஒரு திறமையாகும். ஒரு ஆசிரியர், வகுப்பறை கலையை கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். இதனால் முழு நேர கல்லூரிகளில், கண்டிப்பாக முறையான கல்வி கற்றவர்களை மட்டுமே உதவிப் பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
கல்லூரிகளுக்கு செல்லாமல் திறந்தவெளி பல்கலைக்கழகம், தொலை நிலைக்கல்வியில் பட்டம் பெற்றவர்கள் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி உதவி பேராசிரியர்களாக நியமிக்க தகுதியற்றவர்கள். இதனால் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தை மேற்கொள்ள தமிழ்நாடு உயர் கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை மீறும் அலுவலர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசு உதவிப் பேராசிரியர் நியமனம் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி நடைபெறுவதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.