மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "சோழவந்தானிலிருந்து வாடிப்பட்டி செல்வதற்கான பிரதான சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே ரயில் பாதை அமைந்துள்ளது. சோழவந்தான் பகுதியிலிருந்து ரயில் பாதையை கடந்து 40 கிராமங்கள், நான்கு வழிச்சாலை மற்றும் திண்டுக்கல், பழனி போன்ற மாவட்டங்களுக்கு செல்ல கூடிய முக்கிய பாதையாக இருந்து வருகிறது. இந்த பாதை வழியாக விவசாய பொருள்கள், பள்ளி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் சென்று வருகின்றனர்.
இந்த ரயில் பாதையில் தினம்தோறும் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியை இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கடந்து செல்ல தாமதமாகி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் பாலம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கையின் அடிப்படையில் 2015ஆம் ஆண்டு ரயில்வே நிர்வாகம், மாநில அரசு இணைந்து பாலம் கட்டும் பணியை தொடங்கின.
ஆனால், கடந்த ஒரு வருடமாக பாலம் கட்டும் பணி நடைபெறவில்லை. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக சாலை மிகவும் மோசமடைந்து தினம்தோறும் 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன விபத்து ஏற்படுகிறது. பாலம் கட்டும் பணியை மீண்டும் தொடங்க அலுவலர்களிடம் மனு கொடுத்தும் பயன் இல்லை. எனவே, பாலம் கட்டும் பணியை உடனடியாக தொடங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், பாலம் கட்டும் பணி ஏறத்தாழ முடிவடைந்துள்ளது. சாலை அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பணிகள் தொடர்பான தற்போதைய நிலை அறிக்கையை மதுரை ஆட்சியர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.