மதுரையை சேர்ந்த இந்துமதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “கடந்த ஜனவரி 17ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண எனது கணவர் செல்லபாண்டியன் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜல்லிக்கட்டு காளை எனது கணவர் மீது முட்டியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டபோது எனது கணவர் இறந்து விட்டார் என மருத்துவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு எனது கணவரின் உடற்கூராய்வு நடைபெற்றது. பின்னர் தொடர்ந்து முதலமைச்சர் நிதியிலிருந்து எனது கணவர் இறப்புக்கு இழப்பீடு வழங்கக்கோரி உயர் அலுவலர்களுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. எனவே இந்த மனுவை பரிசீலனை செய்து எனது கணவர் இறப்பிற்கு உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை பரிசீலனை செய்து ஆறு வாரத்தில் உரிய இழப்பீடு வழங்க மதுரை மாவட்ட ஆட்சியர்க்கு உத்தரவிட்டார்.