தஞ்சாவூரைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு ஒன்றைத்தாக்கல் செய்திருந்தார். அதில், சோழமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கட்டடக் கலைக்கு ஒரு உதாரணமாக திகழ்கிறது.
அது பாரம்பரிய தொல்லியல் சின்னமாகவுள்ளதால் கோயில் கட்டுப்பாட்டை இந்தியத் தொல்லியல் துறை ஏற்றுள்ளது. தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட போது கோயில் வளாகத்தின் எட்டு திசைகளிலும் ஆளுகின்ற கடவுள்களை தனித்தனியாக அமைத்து அதற்கு சன்னதி ஏற்படுத்தியுள்ளனர். சன்னதிக்கு ஒரு சிறிய விமானமும் எழுப்பியுள்ளனர்.
அஷ்டதிக்கு பாலகர் என அழைக்கப்படுகின்ற இந்த எட்டு தனித்தனி சன்னதிகள் தற்போது பூட்டியே கிடக்கிறது. சில சன்னதிகளில் சிலைகள் இல்லாமலும் பராமரிப்பின்றியும் உள்ளது. இந்த சன்னதிகளைப் பராமரித்து பூஜை செய்வதற்கு தஞ்சாவூர் தேவஸ்தானம் முன்வந்த போது, இந்திய தொல்லியல் துறை அனுமதிக்கவில்லை.
எனவே, ஆயிரம் ஆண்டு பழமையான இந்த கோயிலில் உள்ள அஷ்டதிக்பாலகர்கள் எண்திசை சன்னதிகளைப் பராமரிக்க, இந்து சமய அறநிலையத்துறைக்கும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான போர்டுக்கும் அனுமதி வழங்க இந்தியத் தொல்லியல் துறைக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு இன்று, நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து மத்திய, மாநில தொல்லியல் துறை மற்றும் இந்து அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி ஏழாம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் - மு.க. அழகிரி