கொடைக்கானல் உணவக விடுதி உரிமையாளர்கள் சங்கச் செயலர் அப்துல் கனி ராஜா, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில், கொடைக்கானல் நகராட்சியில் புதிய மாஸ்டர் பிளான் அமல்படுத்தப்படும் வரை விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைப்பது, இடிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுவாமிநாதன் அமர்வு ,"2009இல் பாதரச ஆலை காரணமாக சுற்றுச்சூழல் மாசடைந்தது. இதனால் அந்த ஆலை மூடப்பட்டது. கொடைக்கானல் பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அனுமதிக்க முடியாது. ஆக்கிரமிப்பு கட்டடங்கள், விதிமீறல் கட்டடங்கள் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் 2004இல் உரிய உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் அந்த உத்தரவை அலுவலர்கள் நிறைவேற்றவில்லை. தற்போது கொடைக்கானல் நகராட்சியில் புதிய மாஸ்டர் பிளான் அமலுக்கு வந்துள்ளது. புதிய மாஸ்டர் பிளான் அரசின் இணையதளத்தில் மார்ச் மாதம் வெளியானது.
அதன்படி, இயற்கை வளத்தை பாதுகாக்க உணவக விடுதி கழிவுகளை கொடைக்கானலுக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் 6 மாதத்துக்கு ஒருமுறை ஆய்வு நடத்தி உயர் நீதிமன்ற பதிவாளரிடம் அறிக்கை சமர்பிக்க வேண்டும். அந்த அறிக்கையை அரசின் இணையதளத்திலும் வெளியிட வேண்டும். அது தொடர்பாக பொதுமக்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உரிமை வழங்கப்படுகிறது என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.