மதுரை: மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அனைத்து சமூகத்தினர் ஒன்றிணைந்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு விழா நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவெடுக்க வேண்டும் என்றும் நாளை(ஜன.10) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருக்கும் அமைதி பேச்சுவார்த்தையை முழுமையாக வீடியோபதிவு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த முனியசாமி உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அதில், "மதுரை அவனியாபுரத்தில் பல சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாகக் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்துவதில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாக்கல் செய்த வழக்கில் அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து கமிட்டி அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய ஊர்களில் அரசு நடத்தும் ஜல்லிக்கட்டு விழாவில் அனைத்து சமூகத்தைச் சேர்த்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுகிறது. ஆனால் அவனியாபுரத்தில் மாவட்ட நிர்வாகம் மட்டுமே ஜல்லிக்கட்டு விழா நடத்துகிறது. எனவே ஜனவரி 15ல் நடக்கவிருக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு விழா நடத்த வேண்டும்" என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் முன்பு இன்று(ஜன.9) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீர கதிரவன் ஆஜராகி, "அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டது. தற்போது அவனியாபுரம் மாநகராட்சி எல்லைக்குள் வருவதால் கிராமத்து கமிட்டியினர் என யாரும் இல்லை. குறிப்பிட்ட சில சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாதி மற்றும் இயக்கங்களின் பெயரைக் கூறி ஜல்லிக்கட்டு நடத்த இருக்கும் கடைசி நேரத்தில் வழக்கு தாக்கல் செய்து குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
இது தொடர்பாக நாளை(ஜன.10) மாலை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுதாரர்கள் அனைவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. பேச்சுவார்த்தை இறுதியில் சமூகமான முடிவு ஏற்பட்டால் மனுதாரர் கோரிக்கை பரிசளிக்கப்படும்" எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "நாளை நடக்கவிருக்கும் அமைதி பேச்சு வார்த்தைக்கு அனைத்து தரப்பு மனுதாரர்களை முறையாக நோட்டீஸ் அனுப்பி அழைக்க வேண்டும்.
மேலும், அவர்களின் கருத்துக்களைக் கேட்ட பின்பு சுமுக முடிவை ஏற்படுத்த வேண்டும். மேலும் அமைதி கூட்டத்தை முழுமையாக வீடியோ பதிவு செய்து, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: "கூட்டணி முடிவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்" மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஈபிஎஸ் பேச்சு!