மதுரை: விருதுநகர் கலசலிங்கம் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி வகுப்பு நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால், கடந்த 2021ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி வகுப்பு நடத்த அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி, கல்லூரி நிர்வாகம் சார்பில் செயலர் ஸ்ரீதரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், கல்வியியல் கல்லூரியில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளதால், இது தொடர்பாக விசாரிக்க தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதன் எதிரொலியாக கல்லூரிக்கான அனுமதியை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் திரும்பப்பெற்றது.
பிறகு கல்லூரிக்கு அனுமதி இல்லாத நிலையிலும், 2021ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை, பிஎட் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. இதையடுத்து அனுமதியின்றி மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் மீண்டும் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை இன்று(ஏப்.15) விசாரித்த நீதிபதி, கல்லூரி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
நீதிபதி கூறுகையில், "மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்பித்து வழிகாட்டியாக விளங்க வேண்டிய ஆசிரியர் பணியில் உள்ளவர்களே ஒழுக்கம் இல்லாமல் நடந்துள்ளனர். அனுமதியின்றி 100 மாணவர்களை சேர்த்துவிட்டு இப்போது வழக்கு தொடர்ந்துள்ளனர். மாணவர்கள் மீதான அனுதாபத்தை காட்டி அனுமதி பெற முயல்கின்றனர். 4 செமஸ்டர்களைக் கொண்ட படிப்பில் இதுவரை ஒரு செமஸ்டர் தேர்வைக்கூட மாணவர்கள் எழுதவில்லை. கொரோனவை காரணமாக கூறி வழக்கு தொடர்ந்துவிட்டு, மனுதாரர்கள் இப்போது ஆஜராகவில்லை.
அனுமதி வழங்கப்படாத நிலையில் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்துள்ளார்கள். பணம் வசூலிப்பதையே கல்லூரியின் முக்கிய நோக்கமாக வைத்துள்ளனர். மாணவர்களிடம் கட்டணம் வசூலித்துவிட்டு, அவர்களை வேறு எந்த கல்லூரிக்கும் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். அனுமதியில்லாத கல்லூரியில் விதிகளை மீறி மாணவர்களை சேர்த்துள்ளனர். மாணவர்கள் நலனை பார்க்காமல், தங்களின் சொந்த நலனுக்காக நீதிமன்றத்தை நாடியுள்ளனர்" என்று கடுமையான சாடினார்.
பின்னர் வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, மனுதாரருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அபராதத் தொகையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சட்டப் பணிகள் ஆணையத்திற்கு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய தலைவர் சம்பந்தப்பட்ட 100 மாணவர்களையும் அணுகி, அவர்கள் கல்லூரிக்கு செலுத்திய கட்டணத்தை பெற்றுத் தர உதவ வேண்டும் என்றும், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக மாணவர்கள் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறலாம் என்றும் உத்தரவிட்டார்.