இலங்கை கொழும்பு நகரைச் சேர்ந்தவர்கள் சங்க சிரந்தா, முகமது சப்ராஸ். இவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் தஞ்சமடைந்து, போலி ஆதார் அட்டையை தயாரித்ததாகக் கூறி, ராமநாதபுரம் கேணிக்கரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தங்களை இலங்கைக்கு அனுப்பக்கோரி இருவரும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவரையும் இலங்கைக்கு திரும்பி அனுப்ப நடவடிக்க எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை என்பதால், இவர்கள் இருவரும் மற்றொரு மனுவை அளித்தனர். அதில், எங்களை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். அதனால் நாங்கள் தேவையில்லாமல் சிறையில் உள்ளோம். ஆகவே, எங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்றனர்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் மனுதாரர்கள் மீதான வழக்கை திரும்ப பெறுவதாகவும் மனுதாரர்கள் மீது பதியப்பட்ட வழக்கு முடிக்கப்பட்டு அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஆட்கொணர்வு மனு நிலுவையில் இருக்கும் போது மனுதாரர்கள் எந்த அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர் என்பது தொடர்பாக அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, புழல் சிறை கண்காணிப்பாளர், கேணிக்கரை காவல் ஆய்வாளர், ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் ஆஜராகினர். இந்த விசாரணையில், விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த இருவரை தேட தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், வழக்கில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து, ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.