மதுரை: தீண்டாமையை கடைபிடிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சித்தரேவு கிராமத்தை சேர்ந்த மணி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் காவளபட்டி ஊராட்சிக்குட்பட்ட சித்தரேவு கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த சித்தரேவு கிராமத்தில் உச்சி காளியம்மன் கோவில் செல்வ விநாயகர் கோவிலில் பொது மக்கள் வழிபட்டு வந்திருந்தனர்.
கடந்த பத்து வருட காலமாக பட்டியலினத்தவர்களுக்கு கோயிலுக்குள் சென்று வழிபட விடாமல் உயர் சாதியை சேர்ந்த சிலர் தீண்டாமையை கடைபிடித்து வருகின்றனர். இதனை கண்டித்து பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து உயர்சாதி வகுப்பைச் சேர்ந்த மோதில் ராம், சின்னச்சாமி ராமசாமி ஆகியோர் தலைமையில் கோயில் செல்ல அனுமதி மறுத்து வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பாக பலமுறை அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் உரிய முடிவு எடுக்கப்படவில்லை. தொடர்ந்து எங்கள் சாதி மக்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் தீண்டாமையை கடைப்பிடித்து வருகின்றனர். இது சட்டவிரோதமானது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள உரிமையை மறுக்கக்கூடிய செயல். எனவே எங்களுக்கு எங்கள் சமூகத்தைச் சேர்ந்த மக்களை கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும்.
கடவுள் வழிபாடு என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமையாகும். இதனை எதிர்க்கும் விதமாக உயர் சாதியினர் செயல்பட்டு வருகின்றனர். தீண்டாமையை கடைபிடிக்கும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் சமூக மக்கள் வழிபாடு செய்ய அனுமதித்து உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசின் மூத்த வழக்கறிஞர் திலக்குமார் ஆஜராகி கடவுள் அனைவருக்கும் பொதுவானவர். சாமி கும்பிடுவதில் எந்த பாகுபாடும் பார்க்கக் கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது. இதுபோன்று சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதிகள் பட்டியல் இன மக்கள் செல்வ விநாயகர் மற்றும் உச்சி காளியம்மன் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர்சாதி வகுப்பைச் சேர்ந்த மோதில் ராம், சின்னச்சாமி, ராமசாமி ஆகியோர் எழுத்துப்பூர்வமான பதிலை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஒத்தி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: அண்ணாமலை மீது விசிக வழக்கு... விசாரணைக்கு ஏற்பு