மதுரை: மணல் கடத்தல் விவகாரங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை தூங்குகிறதா என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, இவ்விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு விரிவான நிலை அறிக்கையை செப்டம்பர் 29 ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
மதுரைக் கிளையின் வரம்பிற்குட்பட்ட சிவகங்கை,விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் சவுடு மண் எடுக்க தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து, சவுடு, உபரி மண் எடுக்க என அனுமதி பெற்று சட்ட விரோதமாக மணல் எடுக்கப்படுவதாகவும், அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் நேற்று (செப்.14) நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை தூங்குகிறது. வி.ஏ.ஓ., மின்வாரிய பொறியாளர்கள் மீதும் அதிகபட்சமாக காவல்துறை மீது மட்டுமே லஞ்ச வழக்குப் பதியப்படுகிறது. மணல் கடத்தல் சம்பந்தமாக, எத்தனை வி.ஏ.ஓ., மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக எத்தனை வாகனங்கள், இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
டாஸ்மாக் விற்பனை போல மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தினால் என்ன? மணல் கடத்தல் தடைச் சட்டத்தின் அடிப்படையில் கடத்தலில் ஈடுபட்ட எத்தனை நபர்கள் மீது குண்டர் சட்டம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மணல் கடத்தல் தடுப்பு குறித்து அரசு விதித்துள்ள விதிமுறைகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர்களுக்குத் தெரியுமா? அரசின் உத்தரவுகளை எத்தனை மாவட்ட ஆட்சியர்கள் பின்பற்றினார்கள் என்றும் கேள்வி, ஒவ்வொரு வருடங்களிலும் குறைந்தது 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படுகிறது.
மணல் கடத்தலைத் தடுக்க விஞ்ஞான ரீதியாக ஏதேனும் முடிவு செய்யப்பட்டுள்ளதா, நீதிமன்றங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசுத்தரப்பில் கொடுக்கப்படும் பதில்கள் நீதிமன்றத்தைத் திருப்திப்படுத்தும் வகையில் மட்டுமே உள்ளது. எதுவுமே செயல்முறைப்படுத்துவதாக இல்லை. அதேபோல் மணல் கடத்தலில் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது சம்பந்தமாக தமிழ்நாடு அரசு விரிவான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததோடு, அன்றைய தினம் இந்த வழக்கு சிறப்பு அமர்வில் மாலை நான்கு மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.