தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், நமது பாரம்பரிய கலாசாரங்களை பாதுகாக்கும் வகையில் அவை தொடர்பான பாடங்களை பள்ளிக்கல்வித்துறையின் பாடப்பகுதியில் சேர்க்க வேண்டுமென கோரிக்கை விடுதிருந்தார். மேலும் அவர் தனது மனுவில், நமது பாரம்பரிய கலாசாரங்கள், வீரமிக்க கலைகள், நாட்டுப்புறக் கலைகள் ஆகியவை எதிர்கால சந்ததியினருக்கு முறையாக எடுத்துச் செல்லப்படுவதில்லை. பழமையும் பெருமையும் மிக்க தமிழ் மொழி, 64 ஆயகலைகள், அறம், பொருள், இன்பம், வீடு உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரியங்கள், காக்கப்பட வேண்டும். சுயநலம் மிக்க அரசியல் தலைவர்களால் இதுபோன்ற விஷயங்கள் முறையாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுவதில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இங்கு தவறான சித்தாந்தங்கள், சில நடிகர்கள் தங்களை பிளேபாய்களாக காட்டிக் கொள்வது போன்றவற்றால் ஒழுக்கக் கேடும் பாரம்பரிய கலாச்சார சீரழிவும் ஏற்படுகிறது. ஆகவே, கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு கற்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். நமது பாரம்பரிய கலாச்சாரங்களை பாதுகாக்க அவற்றை பள்ளிக்கல்வித்துறையின் பாடப்பகுதியில் ஒன்றாக அமைக்க வேண்டும். தற்காப்புக் கலைகள், பாரம்பரிய கலைகளை கற்றுத் தருவதோடு அதற்கு முறையான சான்றிதழ்களை வழங்கவும், அவர்களுக்கான வேலைவாய்ப்பினை ஏற்படுத்தவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.
இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு, இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.