மதுரை: தமிழ்நாடு மீன்வளத்துறை பல்கலைக்கழக சட்ட விதிகளுக்கு எதிராக செயல்படும் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணைவேந்தர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், "நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் துணைவேந்தர் பத்துக்கும் மேற்பட்ட சுயநிதி கல்லூரிகளை உருவாக்கி அதில் புதிய பட்டப் படிப்புகளை இரண்டரை வருடங்களுக்குள் உருவாக்கி உரிய அனுமதி இல்லாமல் செயல்படுத்தி வருகின்றனர்.
இதனால் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்திற்கு வரக்கூடிய நிதிகளை திசை திருப்பும் வேலையிலும் ஈடுபடுகின்றனர். மேலும் சுயநிதி குழுவில் பணியாற்றுவதற்காக ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கு விளம்பரம் செய்து தமிழ்நாடு மீன்வளத்துறை பல்கலைக்கழக சட்டத்திற்கு பின்பற்றாமல் தகுதி இல்லாத ஆசிரியர்களை நியமித்து வருகின்றனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி பிறப்பித்த உத்தரவில், மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை செயலர் புகாரை பரிசீலனை செய்து 6 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க:'கரோனா நெகட்டிவ் சான்று அவசியம்' - ஜல்லிக்கட்டு நெறிமுறைகள் வெளியீடு!