தஞ்சாவூரை சேர்ந்த செந்தில்நாதன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், தஞ்சாவூர் பெரிய கோயில் எங்கள் தேசம் மற்றும் தமிழ் இனதின் பெருமை, இந்தக் கோயிலை 1100 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பேரரசர் ராஜா ராஜ சோழன் கட்டியுள்ளார். இவ்வாறு தமிழ் கலாசாரத்தின் பெருமை மற்றும் கட்டடக்கலை அறிவு ஆகியவற்றைக் கூறி 1000 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கோயில் இருப்பது உலக அதிசயம். இப்போது கோயிலின் பிரதிஷ்டை 05.02.2020 அன்று பல ஆண்டுகளுக்குப் பிறகு நடத்த முடிவு செய்துள்ளனர். இதில் தமிழ் ஆகம விதிகளை பின்பற்றாமல் நடத்துவதற்கு அருள்மிகு பெரிய கோயில் நிர்வாகிகள் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.இது தொடர்பாக கடந்த 26.12.2019 அன்று அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, பிப்பரவரி 1 முதல் 5ஆம் தேதி வரை பன்னிரு திருமுறைகள் முற்றோதுதல் செய்வது குறித்த விவரங்கள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வழங்கப்பட்டது. தமிழ் ஆகம விதிப்படிதான் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது என்று இந்து சமய அறநிலையத்துறை வழக்கறிஞர் கூறினார் .
இதைத்தொடர்ந்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், குடமுழுக்கு நிகழ்வு மட்டும் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கூறினார் .
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை செயலர், ஆணையர், மத்திய தொல்லியல் துறை ஆணையர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கோயில் தேவஸ்தான நிர்வாகி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 27ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.