தூத்துக்குடி, கடம்பூர் பகுதியை சேர்ந்த செல்வகுமார் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், ’இந்தியாவில் செம்மொழி என 6 மொழிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், அனைத்து மொழிகளிலும் மிகப்பழமையான மொழியாக தமிழ் இருந்துவருகிறது. உலகம் முழுவதும் 100 மில்லியன் (10 கோடிக்கும்) அதிகமானோர் தமிழர்கள். ஆனால் கடந்த மூன்று வருடங்களாக தமிழ் மொழி வளர்ச்சிக்கு என ரூபாய் 22.94 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
சுமார் 14 ஆயிரம் நபர்களை மட்டும் கொண்ட சமஸ்கிருத மொழிக்கு கடந்த மூன்று வருடங்களில் ரூபாய் 643.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருத மொழி கற்றுக்கொள்ள இந்தியா முழுவதும் 27 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
மிகவும் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட சமஸ்கிருதத்திற்கு 22 விழுக்காடு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. செம்மொழியான தமிழ்மொழி வளர்ச்சிக்கு 1000 கோடி ரூபாய் அளவு நிதி ஒதுக்கீடு செய்யவும், சென்னையில் உள்ள மத்திய செம்மொழி கல்வி நிறுவனத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்றவும், இந்தியா முழுவதும் செம்மொழியான தமிழை கொண்டு செல்வதற்கு கல்வி நிறுவனங்கள் தொடங்கவும் உத்தரவிட வேண்டும்’என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கை குறித்து ஒன்றிய அரசு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த வழக்கு விசாரணையை ஆகஸ்டு 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கைகளால் மனித கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரிய வழக்கு: உள்ளாட்சி நிர்வாகங்கள் பதில் அளிக்க உத்தரவு