மதுரை: அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டி. இவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பொட்டல் கிராமத்தில் எம்-சாண்ட் மணல் எடுக்க அனுமதி பெற்று ஆற்று மணலை எடுத்து சிலர் கேரளாவிற்கு கடத்திவந்துள்ளனர்.
இதுகுறித்து ஆய்வு செய்த வருவாய்த் துறையினர், காவல்துறையினர் சட்டவிரோதமாக ஆற்று மணல் எடுத்தவர்கள்மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், இவ்வழக்கை காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை செய்யவில்லை. எனவே, வேறு அமைப்பிற்கு இவ்வழக்கை மாற்றி விசாரணை செய்யவேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்தமனு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்," இவ்வழக்கில், 27,000 கியூபிக் மீட்டர் ஆற்றுமணல் சட்டவிரோதமாக திருடப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் கடத்தலுக்கு உபயோகப்படுத்தப்பட்ட லாரிகள் பறிமுதல் செய்யும்போது அதில் அரசு வழங்கும் போக்குவரத்து அனுமதி சீட்டு கையெழுத்து இல்லாமலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில், பல்வேறு அரசுத்துறைக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, இவ்வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி உத்தரவிடப்படுகிறது. கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைக்கவேண்டும், மணல் எடுக்க அனுமதி கொடுத்த இடத்தினை திடீர் ஆய்வு நடத்தவேண்டும்" எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: கிராவல் மணல் கடத்திய 6 பேர் கைது