மதுரை: மதுரையை சேர்ந்த ராஜாத்தி நாகமணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் ஒரு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், 'கடந்த 2022 ம் ஆண்டு நவம்பர் மாதம் ராஜாத்தி நாகமணி, பாலமுருகன் தம்பதிக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ராஜாத்தி நாகமணி, குருவம்மாள் என்பவரிடம் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து 2023 ஜூலை மாதம், தான் பெற்ற குழந்தையுடன் மதுரை அழகர்கோவிலுக்கு வர சொல்லி குருவம்மாள் கூறியதாக முருகன், விஜயலட்சுமி ஆகியோர் ரூபாய் 3 லட்சத்தை கொடுத்து குழந்தையை பெற்று சென்றனர். மனுதாரர் பெற்ற 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயையும் திரும்ப செலுத்தியுள்ளார். தான் பெற்ற குழந்தையை கட்டாயப்படுத்தி தத்தெடுப்பு பத்திரதில் கையெழுத்து வாங்கி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தனர்.
கட்டாயப்படுத்தி தனது குழந்தையை வாங்கி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழந்தையை மீட்டு தன்னிடம் ஒப்படைக்கவும், பத்திரப்பதிவு செய்த அதிகாரிகள் மற்றும் புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்' என அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நிர்மல் குமார் அமர்வில் இன்று (செப்.2) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் இடமிருந்து கட்டாயப்படுத்தி குழந்தையை பணம் கொடுத்து எடுத்துச் சென்றுள்ளது நிரூபணம் ஆகியுள்ளது. மேலும், தத்தெடுப்பு பத்திரமாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளது சட்ட விரோதமான செயலாகும்.
இது போன்ற குழந்தை தத்தெடுப்பு செயல்களை, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வழக்கில் பத்திரப்பதிவு ஐ.ஜி-யை எதிர் மனுதரராக சேர்த்து, எதன் அடிப்படையில் சட்டவிரோதமாக குழந்தை தத்தெடுப்பு பத்திரத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தனர் என்பதை குறித்து பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், குழந்தையை பணத்துக்காக தாயிடமிருந்து பெற்று சென்றுள்ளார்களா? என்பது குறித்து விசாரணை செய்து தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, குழந்தையை தாயிடம் ஒப்படைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: "உங்க கடைக்கு தமிழில் பெயர் பலகை வைக்கலயா? - போச்சு போங்க!" - விரைகிறது நீதிமன்றத்தின் புது உத்தரவு!