கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற ஊர்வலத்தின்போது, மேடை அமைத்து பேசுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா காவல்துறையை கண்டித்ததுடன், நீதிமன்றத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இழிவான சொற்களில் விமர்சித்தார்.
இதுதொடர்பாக திருமயம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு, திருமயம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தந்தை பெரியார் திராவிடர் கழக துணை தலைவரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான துரைசாமி, "மத்தியில் ஆளும் பாஜகவின் தேசிய செயலாளர் என்பதால் ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க காவல்துறை தயங்குகிறது. ஆகவே வழக்கை விசாரித்து, விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, திருமயம் காவல் ஆய்வாளர் இதுதொடர்பாக 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.