மதுரை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மாவட்டத்தில் நாளொன்றுக்கு மூன்றாயிரம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று கரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்து மதுரையில் ஆய்வு மேற்கொண்ட மாநில சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்தார்.
“தற்பொழுது மதுரையில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 500 பேருக்கு எடுக்கப்படும் கரோனா பரிசோதனையின் அளவினை மூவாயிரம் என்று உயர்த்த வேண்டும்.
கடந்த சில நாள்களாக, நாளொன்றுக்கு சுமார் 300 பேர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு குடும்பத்தில் நான்கு பேர் என்று கணக்கிட்டாலும், ஆயிரத்து 200 பேர் தொற்று பாதித்தவரின் குடும்பத்தினர், தொற்றுக்கு உட்பட்டவர்களின் தொடர்பாளர்கள் என்று மூன்று பேர் வீதம் என்றால் அவர்களின் எண்ணிக்கை 900 ஆகிறது.
அதன்படி, 300 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டால் அவர்கள் சார்ந்த இரண்டாயிரத்து 100 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்படவேண்டிய நிலை உள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகம் நாளொன்றுக்கு ஆயிரத்து 500 சோதனைகள் மட்டுமே செய்வது, எவ்வகையிலும் பொருத்தமல்ல.
மதுரை அரசு மருத்துவமனையில் ஆயிரத்து 300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக தொடர்ந்து சொல்லப்படுகிறது. ஆனால் இதில் சரிபாதி அளவே தயார் நிலையில் உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. எனவே தாங்கள் தலையிட்டு உடனடியாக படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நாள்தோறும் 32 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்படுகின்றன. இவற்றை நாள்தோறும் 50 என்ற எண்ணிக்கையில் அதிகப்படுத்த வேண்டும். அதேபோல புறநகர் பகுதியிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும்.
மதுரையில் தொற்றின் வேகம் மிக அதிகமாக உள்ளது, இறப்பு விகிதமும் தொடர்ந்து அதிகரிக்கிறது. இந்நிலையில் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மாவட்ட, மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தையும், அலுவலர்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டியுள்ளது. ஆனால், மதுரையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மருத்துவ துறை சார்ந்த அலுவலரை சென்னைக்கு மாற்றும் முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் மக்களை மேலும் துயருக்குள்ளாக்க வேண்டாம்” என்றார்.