மதுரை: சேலம், கோவை மாவட்டங்களில் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் இன்று காலை(மே 21) மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்தார்.
இதுதொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்திற்குப் பின்பு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் வாரிசுகள், தீவிர காயமுற்றோர் என 17 பேர்களுக்கு, அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசுப்பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
முன்னதாக, அதிமுக ஆட்சியில் அவர்களுக்கு கிராம உதவியாளர் பணி வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, தங்களுக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் பணி வழங்கவேண்டும் என வலியுறுத்திவந்த அவர்கள், அண்மையில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியிடம் கோரிக்கை மனுவை அளித்திருந்தனர். அந்த கோரிக்கை மனுவை முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு சென்றதன் விளைவாக, இன்று அவர்களுக்கு இந்தப்பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்ட ஸ்னோலினின் சகோதாரர் உள்ளிட்ட 17 பேரும், ஆட்சிக்கு வந்து சில நாட்களிலேயே தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றியதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தோப்பூர் கரோனா சிகிச்சை மையம் திறப்பு!