மதுரை மாவட்டம், ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி முனீஸ் வேலுமணி பிரசவத்திற்காக மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரசவ வார்டில் உறவினர்கள் காலணி அணிந்து வந்ததால் அங்கு பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் அவர்களை அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது,
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பெண் பயிற்சி மருத்துவரைத் தாக்கி காயம் ஏற்படுத்தியதால் மருத்துவர் விபத்துக்கான சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த நிலையில் மருத்துவரைத் தாக்கியதாக ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த உறவினர்களான ராஜராஜேஸ்வரி, முருகேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்கள் மீது மருத்துவ பாதுகாப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் குற்றவாளிகளை காவல் துறையினர் முறையாக கைது செய்யவில்லை எனக் கூறி, நள்ளிரவு ஒரு மணியளவில் திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மதுரை அரசு ராசாசி மருத்துவமனை வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதை உறுதி செய்ததைத் தொடர்ந்து, மருத்துவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிக்க: கரூரில் கனமழை: மின்கசிவினால் தீவிபத்து!