மதுரை மாவட்டம் சிலைமான் எல்.கே.டி நகரை சேர்ந்தவர் செல்லம்மாள். இவருக்கு கணவர், குழந்தைகள் யாரும் இல்லாத நிலையில் அப்பகுதியில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், இவரது வீட்டின் அருகே உறவினரான அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணியாற்றும் டைட்டஸ் என்பவருக்குச் சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
அந்த குழந்தையைப் பார்ப்பதற்காக மூதாட்டி செல்லமாளை இவர் அழைத்துள்ளார். அவர் வர மறுத்ததால் மதுபோதையில் இன்று (ஆகஸ்ட் 15) மூதாட்டியை கழுத்தை நெரித்து டைட்டஸ் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற சிலைமான் காவல் துறையினர் மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, காவல்துறையினர் நடத்திய முல்கட்ட விசாரணையில், மூதாட்டி செல்லமாளை, டைட்டஸ் மதுபோதையில் கழுத்தை நெரித்ததாகவும் அதில், மயக்கமடைந்த அவர் கீழே விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.