மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நவராத்திரி விழா தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். கொலு அலங்காரங்களோடு கோவில் வளாகத்தில் நடைபெறும் கண்காட்சி பக்தர்களால் பெரிதும் ஈர்க்கப்படும் நிகழ்வாகும்.
நவராத்திரி விழா கொண்டாடப்படும் 10 நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வந்திருந்து சாமி மற்றும் அம்மனின் அருளை பெற்று செல்வது வழக்கம். மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா கடந்த செப்டம்பா் 26ஆம் துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கொலுசாவடியில் வைக்கப்பட்டுள்ள கொலு அலங்கார பொம்மைகள், குறிப்பாக சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் தொடா்பான பொம்மைகள் உள்ளிட்டவற்றை ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
தொடர்ந்து கொலு மண்டபத்தில் (உற்சவர்) அம்மன் நாள்தோறும் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த நிலையில் நவராத்திரி திருவிழாவின் 9ஆம் நாளான இன்று மீனாட்சி அம்மன் சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் அருள்பாலிப்பு