மதுரை: மாமன்னர்கள் மருது சகோதரர்களின், 221ஆவது நினைவு நாளை முன்னிட்டு, மதுரையில் தமிழ்ச்சங்கம் சாலையில் உள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடரந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டவர்கள் மருதிருவர். அண்ணன், தம்பி பாசத்திற்கும் நட்பிற்கும் உதாரணமாக தங்கள் உயிரை நீத்த மருது சகோதரர்களின் நினைவு நாள் இன்று. அதிமுக சார்பில் வீர வணக்கம் செலுத்தியுள்ளோம். அதிமுக சார்பில் மருது சகோதரர்களின் நினைவிடம் அமைத்தது, அரசு விழாவாக அறிவித்தது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு' எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், 'பசும்பொன் முத்துராமலிங்கத்தேவருக்கு தங்க கவசம் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். அப்போது அதிமுக பொருளாளராக யார் இருக்கிறார்களோ, அவர்களே தங்க கவசத்தைப் பெற்று ஒப்படைக்க வேண்டும் என்னும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு இதுபோன்று கட்சியில் பிரச்னை ஏற்பட்டபோது ராமநாதபுரம், மதுரை மாவட்டச்செயலாளர்களிடம் ஒப்படைத்தனர். அதுபோன்ற நிலை தற்போது இல்லை. தற்போது அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் உள்ளார். பிற வங்கிகளில் அதிமுக வங்கிக்கணக்கை தற்போதைய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் நடைமுறைப்படுத்தி வருகிறார்.
RBI விதிமுறைகளைப் பின்பற்றினாலே தற்போதைய பொருளாளருக்குத்தான் உரிமை உள்ளது. பசும்பொன் தேவர் தங்க கவசம், அதிமுகவால் வழங்கப்பட்டது. பொருளாளர் கையெழுத்து இட்டு எடுத்துச்செல்லலாம். தங்க கவசம் எந்த தனி நபருக்கும் சொந்தமானது அல்ல. தற்போது தேவர் தங்க கவசம் யார் பெறுவது என்பது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி நடுநிலையோடு செயல்படுவோம்' எனக் கூறினார்.
இதையும் படிங்க:இந்தியா ஒருபோதும் போரை முதல் வாய்ப்பாக கருதாது - பிரதமர் மோடி