மதுரையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் மண்டபத்தின் ஒரு பகுதி முழுவதும் பிளாஸ்டிக், வெள்ளி, தங்கத்தினால் ஆன பாத்திரங்கள், தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்கள், இரு சக்கர வாகனம், கார், ட்ராக்டர் ஆகிய வாகனங்களை சீர் வழங்க அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படம் இணையதளத்தில் பலராலும் பகிரப்பட்டு வந்தது.
கரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பலரும் தவித்துவரும் நிலையில், யாருடைய இல்லத் திருமணத்தில் இது போன்ற சீர் வரிசைகள் வழங்கப்பட்டன என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டது.
இந்நிலையில், இந்தத் திருமணம் குறித்த தகவல்கள் வெளிவர ஆரம்பித்தன. இது, மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ தமிழரசுவின் இல்லத் திருமணம் என்பது தெரியவந்துள்ளது.
தமிழரசுவின் மகள் கீர்த்திக்கும் கொடிமங்கலம் வி.பி. வைத்தியநாதன் என்பவரின் மகன் வெற்றிவேல் என்பவருக்கும் நேற்று முன்தினம் (நவ. 4) நாகமலை புதுக்கோட்டையில் திருமணம் நடைபெற்றது.
இத்திருமணத்திற்காக மணமகள் கீர்த்திக்கு வழங்கப்பட்ட சீர்வரிசைகள்தான் இணையத்தில் பரவிவரும் புகைப்படங்கள். இந்த சீர்வரிசைப் பொருள்களின் மதிப்பு இரண்டு கோடி ரூபாய் இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சீர் வரிசையை கண்டு திருமணத்திற்கு வந்தவர்கள் மட்டுமின்றி, இணையத்தில் புகைப்படங்களைப் பார்த்த பலரும் வாயடைத்து திகைத்து நின்றிருப்பர்.
இதையும் படிங்க: திருமணம் செய்துகொள்ள சார் ஆட்சியர் கேட்ட 'வித்தியாசமான' வரதட்சணையும்... அதை ஏற்றுக்கொண்ட பெண்ணும்!