மதுரை: திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் கேட்பது தொடர்பாக தொடர்ந்து பிரச்சனை இருந்து வருகிறது. அண்மையில் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுக்குரிய சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 04) காலை கப்பலூர் சுங்கச்சாவடி அருகே சுங்கச்சாவடியை அகற்றக்கோரி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு பந்தல் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டபோது அங்கு வந்த திருமங்கலம் டிஎஸ்பி சிவகுமார் தலைமையிலான காவல் துறையினர் உண்ணாவிரத போராட்டத்திற்கு முறையாக அனுமதி பெறவில்லை எனவும், எனவே பந்தல் அமைக்க கூடாது எனவும் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த ஆர்.பி. உதயகுமார் காவல் துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பந்தல் அமைக்க அனுமதி அளிக்காததால் தொண்டர்களுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவருக்கு ஆதரவாக உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அய்யப்பன் உள்பட ஏராளமான அதிமுக தொண்டர்கள் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிடாததால் அதிமுக தொண்டர்கள் அனைவரையும் காவல் துறை கைது செய்து பேருந்துகளில் ஏற்றினர். இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து ஆர்.பி. உதயகுமாரை கைது செய்ய முற்பட்டபோது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அதிமுக தொண்டர்களை காவல் துறையினர் குண்டுகட்டாக தூக்கி பேருந்துகளில் ஏற்றினர். இதபோல் ஆர்.பி. உதயகுமார், உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அய்யப்பன் ஆகியோரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி. உதயகுமார், “சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து சுங்கச்சாவடி நிர்வாகம் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் கேட்டு பிரச்சினை எழுப்பி வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது சுங்கச்சாவடி நிர்வாகம் திருமங்கலம் நகர் மற்றும் கப்பலூர் வாகன ஓட்டிகளுக்கு இரண்டு ஆண்டு சுங்க கட்டணம் செலுத்த வேண்டுமென வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இது திருமங்கலம் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு 28 கோடி ரூபாய் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக அமைதியான போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் காவல்துறை அதற்கு அனுமதி மறுக்கிறது.
தேர்தலின்போது கப்பலூர் சுங்கச்சாவடி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த தமிழக முதல்வர் தற்போது வரை அதற்கான எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை. எனவே அரசு உடனடியாக கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்” என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: 12 இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்