மதுரை: தூத்துக்குடி அருள்மிகு சங்கர ராமேஸ்வரர், வைகுண்டபதி கோயில் சொத்துகளை பாதுகாக்கக் கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு இன்று வந்தது. மனு மீது விசாரணை செய்த நீதிபதிகள், "கோயில்களில் தினமும் பூஜைகள் நடைபெறவேண்டும் என்பதற்காக பலர் நிலங்களை தானமாக வழங்கியுள்ளனர். இந்த சொத்துக்கள் எந்த நோக்கத்திற்காக வழங்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேற நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கோயில் நிலங்களின் வருவாய் கோயில் நலனுக்கு பயன்படுத்துவதை உறுதிசெய்யவேண்டும். கோயில்களில் பழமையான கலாசாரத்தின் அடையாளம் மட்டும் அல்ல. கலை, அறிவியல், ஆன்மிக அறிவுகளின் களஞ்சியமாக உள்ளன. கோயில் சொத்துகளை முறையாக பராமரித்து வருவாயை அதிகரித்து கோயில் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.
கோயில் சொத்துக்களை மீட்க இரு குழுக்கள் அமைப்பதுடன் கோயில் சொத்துக்களின் விபரங்களை கோயில் இணையதளத்தில் பதிவேற்றவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
இதையும் படிங்க: ’ஆவின் இயக்குநர்களுக்கான தேர்தலை நடத்தக் கூடாது’ - நீதிமன்றம் உத்தரவு